5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க ராஜாங்க செயலாளர்
5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியா வரும் அமெரிக்க ராஜாங்க செயலர் மார்கோ ரூபியோ, மும்பை மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டாவது முறையாக இந்தியா வரும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர், இந்தப் பயணத்தின் போது, இந்திய அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளார்.
இதன்போது, இந்தியா – அமெரிக்கா இடையிலான உத்திசார் இராஜதந்திர உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள், மற்றும் ஆற்றல் துறை (எரிசக்தி) சார்ந்த கூட்டுறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், முன்னணி தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசவுள்ள அவர், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக முதலீடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்திய நடவடிக்கைக்கு எதிராக, அமெரிக்கா 100 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ள சூழ்நிலையில் மார்கோ ரூபியோவின் இந்த விஜயம் அமைகின்றது.




