உக்ரைனுக்கான உளவுத்துறை உதவி தொடர்கிறது: ட்ரம்ப்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்துக் கியீவ் (Kyiv) எச்சரித்துள்ள நிலையிலும், தாம் உக்ரைனுடன் உளவுத் தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த எரிசக்தி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
தலைநகர் கியீவ் மீது ரஷ்யப் படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி, வெப்ப மின் நிலையம் ஒன்றை இலக்கு வைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக கியீவ் மேயர் விட்டாலி க்ளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
“வழக்கம் போல இம்முறையும் எங்கள் கூட்டாளிகளிடமிருந்து எவ்வித முன் எச்சரிக்கையும் வரவில்லை” என்று முன்கூட்டிய எச்சரிக்கை வராததற்கான காரணத்தைக் குறிப்பிடாமல் செலென்ஸ்கி டெலிகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“எங்கள் உளவுத்துறை தகவல்களின்படி, ரஷ்யா மேலும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருகிறது,” என்று கூறிய அவர், டிரம்பின் எரிசக்தி போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா கட்டுப்பட்டதாக உணரவில்லை என்பதையே இத்தாக்குதல்கள் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். எனினும் போரில் ஈடுபடும் இரு நாடுகளும் இந்தப் போர்நிறுத்தத்தை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எரிபொருள் விலையைக் குறைக்க உதவும் என்ற நோக்கில், ரஷ்ய டீசல் ஏற்றுமதி மீதான தடைகளை அமெரிக்க ஜனாதிபதி தளர்த்தினார். அதைத் தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு செலென்ஸ்கிக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வாஷிங்டன் தொடர்ந்து உக்ரைனுடன் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவர கியீவ் மற்றும் மாஸ்கோ ஆகிய இரு தரப்புடனும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார். “நாங்கள் அவர்களுக்கு உதவி வருகிறோம், உளவுத் தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.




