“பிக்குகள் எழுச்சி: – அநுர அரசுக்கு இறுதி எச்சரிக்கை
“இந்நாட்டிலுள்ள பிக்குகள் தூங்குவதைப் போலத் தோன்றினாலும், அவர்கள் விழிப்புடனேயே இருக்கின்றனர். தேவையான நேரத்தில் எழுவார்கள். அப்போது என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் தொடர்புடைய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தலைக்கவசங்களை அணிந்துகொண்டு, பொல்லுகளுடன் வீதிக்கு இறங்கப்போவதில்லை. தேர்தல் ஒன்றை நடத்துங்கள். நிச்சயமாக உங்களை இல்லாதொழிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புனித பூமியில் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு பிக்குகளுக்கு உரிமை இருப்பதாகவும், அந்தப் பகுதி உயர்பாதுகாப்பு வலயம் அல்ல என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்ணாவிரதப் போராட்டத்தைக் குழப்ப முயன்றவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், ராஜாங்கன தேரர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வருவதாக முன்கூட்டியே அறிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.
“அவ்வாறிருக்கையில் புலனாய்வுப் பிரிவினர் என்ன செய்தனர்? பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. மோதல் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே பொலிஸார் செயற்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது” என்றும் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.





