திருமணத்தில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமை – ஐ.நா அமைப்பு கவலை
உலகெங்கிலும் உள்ள நான்கு பெண்களில் ஒருவருக்கு, தங்கள் கணவர் அல்லது துணைவர் உடலுறவு கொள்ளக் கோரினால், அதற்குச் சம்மதம் தெரிவிக்கும் அதிகாரம் அல்லது அதனை மறுக்கும் நிலையில் இல்லை என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
ஐ.நா. மக்கள் தொகை நிதியம் (UNFPA) இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில், கிட்டத்தட்ட பாதிப் பெண்கள் (45%) தங்கள் திருமண வாழ்வில் ‘வேண்டாம்’ என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் (33%) இதே இக்கட்டான நிலையை எதிர்கொள்கின்றனர்.
அதேபோல் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில், 10 பெண்களில் ஒருவரால் உடலுறவை மறுக்க முடியவில்லை என்று, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
08 நாடுகளை கொண்டு முன்னெடுக்கப்பட்ட பகுப்பாய்வில், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களை விட 15 முதல் 19 வயதுடைய இளம் பெண்கள் துணைவரால் வன்முறைக்கு உள்ளாகுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவை மிகவும் வருத்தமளிக்கும் புள்ளிவிவரங்கள்,” என்று உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பான ‘ஈக்வாலிட்டி நவ்’ (Equality Now) அமைப்பின் வழக்கறிஞர் ஜீன்-பால் முருங்காJean-Paul Murunga தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதுமே மபுடோ Maputo நெறிமுறையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இது வருத்தமளிக்கிறது என்றும், இந்த நெறிமுறை, பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்கான கட்டாய சட்ட தரங்களை நிர்ணயிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2003-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தமான மபுடோ நெறிமுறை, பெண்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது மற்றும் வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க நாடுகளைக் கட்டாயப்படுத்துகிறது.
திருமணம் முழுமையான சம்மதத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது மற்றும் பெண்களின் சுகாதார உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.




