ரோஹிங்கியா இனப்படுகொலைக்கு மியான்மார் அரசே பொறுப்பு: சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மியான்மாரில் 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைகள் மற்றும் பரவலான பாலியல் வன்முறைகள், அரச ஆதரவுடன் இடம்பெற்ற இனப்படுகொலை என ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.
முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட காம்பியா, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கல் செய்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நாஜி இனப்படுகொலைக்குப் பின்னர், இனப்படுகொலைக்கான சட்ட வரையறையை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்த நான்காவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. மேலும், இனப்படுகொலைக்கு ஒரு அரசை நேரடியாகப் பொறுப்பாக்கி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்த முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது.
தீர்ப்பை வாசித்த நீதிமன்றத் தலைவர் நீதிபதி யூஜி இவாசாவா, மியான்மார் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா பொதுமக்களை கொலை செய்ததுடன், பரவலான பாலியல் வன்முறைகளிலும் ஈடுபட்டதாகவும், சிறுவர்கள் மீதான கொடூரமான வன்முறைகள் மற்றும் தப்பிச் சென்ற ரோஹிங்கியா மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களையும் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
வடக்கு ரக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மார் இனப்படுகொலை செய்துள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு தொடர்பில் மியான்மார் அரசாங்கம் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
பாரிய படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கிராமங்கள் அழிப்பு
மியான்மார் இராணுவம் ஆண்கள் மற்றும் சிறுவர்களை பெருமளவில் படுகொலை செய்ததாகவும், ரோஹிங்கியா பெண்களுக்கு எதிராக பரவலான பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இனப்படுகொலை குற்றத்தை சர்வதேச நீதிமன்றங்களில் நிரூபிப்பது மிகவும் அரிதானதாகும். ஒரு தேசிய, இன, மத அல்லது சமூகக் குழுவை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியளவிலோ அழிக்கும் நோக்கம் இருந்தது என்பதை நிரூபிக்க வேண்டிய சட்ட நிபந்தனை இதற்குக் காரணமாகும்.
இந்தத் தீர்ப்பு, மியான்மாருக்கு எதிரான வழக்கைத் தாண்டி ஏனைய சர்வதேச இனப்படுகொலை வழக்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாகக் குற்றம் சாட்டி தென்னாபிரிக்கா 2023ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கிலும், இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறும் என சட்ட நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இஸ்ரேலும் மியான்மாரும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தமது படைகள் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகின்றன.
7 இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்
காம்பியா தாக்கல் செய்த வழக்கில் கிடைத்த முக்கிய சட்ட வெற்றியாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
மியான்மார் இராணுவ நடவடிக்கைகளால் குறைந்தது 7 இலட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள், பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியான்மாரிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 நீதிபதிகள் அடங்கிய குழு, வடக்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள ரோஹிங்கியா மக்களின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கமே மியான்மாரின் நடவடிக்கைகளுக்கு ஒரே நியாயமான விளக்கமாக அமைகிறது எனத் தெரிவித்துள்ளது. இது இனப்படுகொலைக்கான சட்ட வரையறையை பூர்த்தி செய்வதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மியான்மார், பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், அந்த இழப்பீட்டுத் தொகை பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மியான்மாரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் தமது சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் திரும்புவதற்கும், குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும் மியான்மார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட இனப்படுகொலைகள்
சர்வதேச நீதிமன்றங்கள் இதற்கு முன்னர் ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலை, 1995ஆம் ஆண்டு போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனிட்சா படுகொலைகள் மற்றும் 1970களின் இறுதியில் கம்போடியாவில் கெமர் ரூஜ் ஆட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் ஆகியவற்றில் இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரித்துள்ளன.
அரசுகளுக்கு இடையிலான சர்ச்சைகளைத் தீர்ப்பதுடன், சர்வதேச ஒப்பந்த மீறல்கள் தொடர்பில் தீர்ப்பளிக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இறுதியானவை. எனினும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் மற்றும் அமலாக்க வழிமுறைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.
இந்த நீதிமன்றம், தனிநபர்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் வழக்குத் தொடரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) வேறுபட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனிநபர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.




