இஸ்ரேல் வீரரின் ஒழுங்கீனச் செயல் குறித்து விசாரணைக்கு உத்தரவு
அயர்லாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் மீது இஸ்ரேல் வீரர் ஒருவர் காரி உமிழ்ந்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்படும் என ஐரோப்பிய கால்பந்து மன்றமான UEFA அறிவித்துள்ளது.
நெஷன்ஸ் லீக் (Nations League) தொடரின் ஒரு பகுதியாகச் செர்பியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் இரண்டாம் பாதியின் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து UEFA , ‘அல் ஜசீரா’ ஊடகத்திற்குச் செவ்வாய்க்கிழமை அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கையில், செர்பியாவில் நடைபெற்ற இப்போட்டியின் போது வீரர்(கள்) மேற்கொண்ட ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் “பாதி நேர இடைவேளையின் போது tunnel பகுதி அல்லது அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.
அதனடிப்படையில், வீரர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான விசாரணையை மேற்கொள்ள UEFA வின் நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை ஆய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பாக்கா தோபோலாவில் உள்ள டி.எஸ்.சி அரினாவில் (TSC Arena) நடைபெற்ற இப்போட்டியின் போது, ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பதற்றமான சூழல் நிலவியதுடன் வாக்குவாதங்களும் எழுந்தன.




