பிரான்ஸில் தீவிரமடையும் போராட்டம்: 6,100 பேர் இதுவரை கைது
ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமைக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரண்டு நடத்திய மிகப் பெரிய அளவிலான போராட்டத்தின் போது, உயர்நிலை பாடசாலைகளை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
Marseille மற்றும் Nantes ஆகிய நகரங்களில் தேசியக் கல்வியை அரசாங்கம் கொன்றுவிட்டது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திப் போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் பேரணிகளை நடத்தினர். துலூஸ் நகரில் பெற்றோரால் கைக்கோர்க்கப்பட்ட பேரணியும் நடைபெற்றது.
இருப்பினும், ஸ்ட்ராஸ்பூர்க், லியோன் மற்றும் ரென்னெஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறின. போராட்டக்காரர்கள் வீதிகளில் தீ வைத்தும், பொருட்கள் மீது தாக்குதல் நடத்தியும் ஈடுபட்டதால், பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
“எலைட் வகுப்பினருக்கும் நமக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது” என்று ஸ்ட்ராஸ்பூர்க்கைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளிப் பட்டதாரி ஹ்யூகோ வெட்செல் வேதனையுடன் தெரிவித்தார்.
பாரீஸின் ஏழ்மையான புறநகர்ப் பகுதிகளில் கடந்த செப்டம்பரில் தொடங்கிய இப்போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவி, கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் அரசாங்கத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
பிரான்ஸின் உயர்நிலைப்பள்ளி மாணவர் சங்கம் வெளியிட்ட தகவலில், நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் அல்லது மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களை ஒடுக்க அரசாங்கம் அதிரடிப் படைகளைப் பயன்படுத்தியுள்ளது.
போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 6,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 1,483 இளைஞர்கள் உட்பட 1,800-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இம்மோதல்களில் இதுவரை குறைந்தபட்சம் 715 பொலிஸாரும் 215 சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.




