அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சீன ஜனாதிபதியுடன் ட்ரம்ப் பேச்சு
சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன் (Xi Jinping) கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது, அரசியல் கைதிகள் விடுதலை குறித்து விவாதித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மியான்மர் ஆய்வாளரும் அமெரிக்கக் குடிமகனுமான மின் ஜின் (Min Zin) மற்றும் ஹாங்காங்கின் முன்னணி ஊடக அதிபரும் சீன விமர்சகருமான ஜிம்மி லாய் (Jimmy Lai) போன்ற அரசியல் கைதிகளின் விவகாரங்கள் குறித்துப் பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “ஆம், நான் இது குறித்துப் பேசினேன்” என்று டிரம்ப் பதிலளித்தார்.
“நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்கள் நடைபெற்றன என நம்புகிறேன்” என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.
சீன ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாகவே, சீனாவில் தவறாகக் கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் விவகாரங்களை சீனாவுடனான சந்திப்பில் டிரம்ப் எழுப்புவார் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
இருப்பினும் திபெத், உய்கூர் முஸ்லிம் சிறுபான்மையினர் விவகாரம் மற்றும் சீனாவின் புதிய “இன ஒற்றுமை” சட்டம் தொடர்பான பரந்த மனித உரிமைப் பிரச்சினைகள் குறித்து டிரம்ப் நேரடியாகப் பேசுவாரா என்பது குறித்து வெள்ளை மாளிகை எதுவும் தெரிவிக்கவில்லை.




