ஸ்பெயினை நோக்கி படையெடுக்கம் அகதிகள் – ஒரே நாளில் 1500 பேர் வருகை
ஸ்பெயினுக்குச் சொந்தமான கேனரி தீவுகளுக்கு நேற்றைய தினம் அண்ணளவாக 1500 புலம்பெயர்ந்தோர் வந்துச் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கேனரி தீவுகளை நோக்கி மொத்தம் 14 படகுகளில் 1,488 பேர் வருகை தந்துள்ளதாக கடல்சார் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் கேனரி தீவுகளில் உள்ள மிகச் சிறிய தீவுகளில் ஒன்றான ‘எல் ஹியெரோ’ (El Hierro) தீவுக்கு அழைத்து செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அக்டோபர் மாதம் முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஸ்பெயினை நோக்கி வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2020-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் திகதியன்று கேனரி தீவுகளுக்கு அருகில் 1,461 பேர் ஒரே நாளில் மீட்கப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது என்று கடல்சார் மீட்புப் பணிகள் பிரிவு தெரிவித்துள்ளது.




