இஸ்ரேல் பாதுகாப்புக்கு தேசிய ஒற்றுமை அரசாங்கமே தேவை: நெதன்யாகு வலியுறுத்து
இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என இஸ்ரேலின் இடைக்காலப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தனது அரசியல் போட்டியாளரான கடி ஐசன்கோட்டுடன் இணைந்து தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதே இதற்கான ஒரே வழி என அவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை வெளியிட்ட காணொளி அறிக்கையில், ஐசன்கோட்டுடன் கடந்த வியாழக்கிழமை நடத்திய சந்திப்பு, தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது அவசியம் என்ற தனது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய அரசாங்கத்தால் ஈரானின் அச்சுறுத்தலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும், தெஹ்ரான் இஸ்ரேலுக்கு எதிராக அணுவாயுதங்களைப் பயன்படுத்தத் தயங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், அவரது இந்த அழைப்பை சில நிமிடங்களிலேயே ஐசன்கோட் நிராகரித்துள்ளார். இது ஒரு அரசியல் தந்திரம் எனக் குறிப்பிட்ட அவர், நெதன்யாகு தேர்தலில் தோல்வியடைந்துவிட்டதை அறிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள நிலையில், நெதன்யாகு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது ஏமாற்று முயற்சி என்றும் ஐசன்கோட் விமர்சித்துள்ளார்.
ஆட்சி அமைப்பதில் இழுபறி
கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்ற இஸ்ரேலிய பொதுத் தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவின் வலதுசாரி மற்றும் மதவாதக் கூட்டணிக்கு 53 ஆசனங்களும், ஐசன்கோட்டின் நான்கு கட்சிகளைக் கொண்ட கூட்டணிக்கு 48 ஆசனங்களும் கிடைத்தன. அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களைப் பெற்றன.
இதனையடுத்து, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பை இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் கடந்த வாரம் ஐசன்கோட்டிடம் ஒப்படைத்தார்.
அரபுக் கட்சிகள் உட்பட 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐசன்கோட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், 46 உறுப்பினர்கள் நெதன்யாகுவுக்கு ஆதரவளித்திருந்தனர்.
அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐசன்கோட்டுக்கு 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் 14 நாட்கள் நீடிக்கவும் முடியும். எனினும், தனது அரசாங்கத்தில் அரபுக் கட்சிகளை இணைத்துக்கொள்ளப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கம் தொடர்பில் முரண்பாடு
ஐசன்கோட்டின் திட்டத்தின்படி, அவரது கூட்டணியின் 48 உறுப்பினர்களும் நெதன்யாகுவுக்கு ஆதரவான 46 உறுப்பினர்களுக்கு எதிராக வாக்களிப்பதுடன், அரபு மற்றும் தீவிர மதவாதக் கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கலாம். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையின்றியும் அவரது அரசாங்கத்தை அமைக்க முடியும்.
ஆனால், இவ்வாறான அரசாங்கம் இஸ்ரேலின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
மறுபுறம், நெதன்யாகுவின் திட்டத்தில் மத்திய மற்றும் வலதுசாரி யூதக் கட்சிகள் உள்ளடக்கப்படவுள்ளதுடன், அரபுக் கட்சிகள் விலக்கப்படவுள்ளன.
நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச்சின் மத சியோனிசக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஐசன்கோட், தீவிர வலதுசாரி அமைச்சர் இடமார் பென்-க்விரின் ஆதரவாளர்கள் போன்ற தீவிரவாதிகளுடனான அரசியல் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது. தற்போது நெதன்யாகுவின் ஆதரவாளரான அமீர் ஓஹானா அந்தப் பதவியை வகித்து வருகின்றார். அவருக்குப் பதிலாக முன்னாள் இராணுவ அதிகாரியான மத்தான் கஹானாவை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்துள்ளன.




