ஸ்பெயினுக்கு எதிரான போட்டி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவால்
ஸ்பெயினுக்கு எதிரான போட்டி, இங்கிலாந்து கால்பந்து அணியின் உண்மையான திறமையையும் மன உறுதியையும் பரிசோதிக்கும் மிகப்பெரிய சவாலாக அமையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் தற்காப்பு வீரர் மேத்யூ அப்சன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றான ஸ்பெயினுக்கு எதிராக விளையாடுவது இங்கிலாந்து தனது திறனை நிரூபிப்பதற்கான சிறந்த வாய்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் அணியின் ஆட்டத்திறனில் முன்னேற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என்றார்.
மேலும், ஹரி கேன், ஜூட் பெல்லிங்ஹாம் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதும், ஏனைய வீரர்களிடமிருந்து அவர்களுக்குத் தேவையான ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதும் பயிற்றுநர் தோமஸ் துச்செலின் முக்கியப் பொறுப்பு எனத் தெரிவித்தார்.
ஆர்ஜென்டினாவுக்கு எதிரான உலகக் கிண்ணத் தோல்விக்குப் பின்னர் இங்கிலாந்து அணி தனது அணுகுமுறையில் மாற்றங்களைச் செய்து வருவதாகவும், குறிப்பாக நெருக்கடியான சூழ்நிலைகளில் வீரர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றனர் என்பதை மதிப்பிட ஸ்பெயினுக்கு எதிரான போட்டி சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து முன்னிலை பெற்றாலும், பின்னடைவைச் சந்தித்தாலும் வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை இந்தப் போட்டி வெளிப்படுத்தும். ஸ்பெயினுக்கு எதிராக ஒரு புள்ளியைப் பெற்றாலோ அல்லது வெற்றியடைந்தாலோ அது இங்கிலாந்தின் தற்போதைய திறனை நிரூபிக்கும் முக்கியமான அடையாளமாக அமையும் என மேத்யூ அப்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நவம்பர் 15 ஆம் திகதி நடக்கின்றது.





