அமெரிக்காவில் Green card இற்காக காத்திருப்போருக்கு சிக்கல் – 08 நிறுவனங்கள் இடைநீக்கம்
அமெரிக்காவில் நிரந்தர குடியேற்றத்தை பெற தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் 08 நிறுவனங்களை ட்ரம்ப் நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
இதற்கமைய மைக்ரோசாப்ட் Microsoft , அடோபி Adobe , டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் Tata Consultancy Services , இன்ஃபோசிஸ் Infosys , விப்ரோ Wipro , எச்.சி.எல் டெக்னாலஜிஸ் HCL Technologies, காக்னிசண்ட் Cognizant மற்றும் கேப்ஜெமினி Capgemini உள்ளிட்ட எட்டு முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களை ட்ரம்ப் நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு அமெரிக்க தொழிலாளர் துறை செயலாளர் கீத் சோண்டர்லிங் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் ஆகியோரால் நேற்று வெளியிடப்பட்டது.
வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்றத் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இடைநீக்கத்தின் கீழ், நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் (PERM) திட்டத்தின் கீழ், இந்த எட்டு நிறுவனங்கள் தொடர்பான புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதையும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களைச் செயலாக்குவதையும் அமெரிக்க தொழிலாளர் துறை நிறுத்தும்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள துணை ஜனாதிபதி வேன்ஸ், அமெரிக்காவில் வேலைகளைக் குறைக்கும் அதே வேளையில், அந்நிறுவனம் ஏன் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது என்று கேள்வி எழுப்பி மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சாடியுள்ளார்.
நிர்வாகத்தின் கூற்றுப்படி, 2009 ஆம் ஆண்டு முதல் இந்த எட்டு நிறுவனங்களும் கூட்டாகச் சேர்ந்து கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாடியுள்ளன.
இதன் மூலம் 230,000-க்கும் மேற்பட்ட H-1B விசா ஒப்புதல்களையும், 100,000-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ்களையும் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




