ஆபிரிக்க கிண்ணம் குறித்து நாளை வரலாற்று தீர்ப்பு
2026 ஆபிரிக்கக் கிண்ண (AFCON) கால்பந்துத் தொடரின் சாம்பியன் பட்டம் தொடர்பாக செனகல் தாக்கல் செய்த மேல்முறையீட்டின் மீதான தீர்ப்பை, விளையாட்டுக்கான சர்வதேச தீர்ப்பாயம் (CAS) நாளை (நவம்பர் 24) அறிவிக்கவுள்ளது.
ஜனவரி மாதம் மொரோக்கோவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 1–0 என்ற கோல் கணக்கில் செனகல் வெற்றி பெற்றிருந்தது.
எனினும், போட்டியின் இறுதிக் கட்டத்தில் மொரோக்கோவுக்கு வழங்கப்பட்ட பெனால்டி முடிவை எதிர்த்து செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வீரர்கள் மீண்டும் மைதானத்துக்குத் திரும்பிய நிலையில், மொரோக்கோவின் பெனால்டி தவறவிடப்பட்டது. மேலதிக நேரத்தில் செனகல் வெற்றி கோலைப் பதிவு செய்தது.
இந்நிலையில், போட்டி விதிமுறைகளை மீறி செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியதாகக் கூறி, ஆபிரிக்க கால்பந்து சம்மேளனத்தின் (CAF) மேன்முறையீட்டுக் குழு செனகல் அணியின் வெற்றியை இரத்து செய்து, மொரோக்கோவுக்கு 3–0 என்ற வெற்றியை வழங்கியதுடன், சம்பியன் பட்டத்தையும் அந்த அணிக்கு வழங்கியது.
இதனை எதிர்த்து செனகல் கால்பந்து சம்மேளனம் CAS-இல் மேல்முறையீடு செய்தது. மொரோக்கோ மற்றும் CAF தரப்பினரின் வாதங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இறுதித் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.
செனகலின் பட்டம் மீண்டும் வழங்கப்படுமா அல்லது மொரோக்கோவின் சம்பியன் பட்டம் உறுதி செய்யப்படுமா என்பது நாளைய தீர்ப்பில் தெரியவரும்.




