உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் : வாழ்க்கை தரத்தின் அடிப்படையில்
உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டின்படி ஐரோப்பிய நாடுகள் உலகின் சந்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்டுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸின் ( Global Citizen Solutions) உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டின்படி, உலகளவில் உள்ள 10 வலிமையான கடவுச்சீட்டுகளில் 09 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன.
உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடானது, விசா இல்லாமல் பயணம் செய்வதற்கான அணுகல், முதலீட்டு ஈர்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.
இந்த குறியீடானது ஹென்லி கடவுச்சீட்டை போல் அல்லாமல், முதலீடு, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.
இதற்கமைய இந்த தரவரிசையில் சுவீடன் முதலாவது இடத்தையும், சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும், பின்லாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஸ்வீடன் இந்தத் தரவரிசையில் முன்னணியில் உள்ளது, இது பயணக் குறியீட்டில் 11ஆவது இடத்திலும், முதலீட்டில் ஒன்பதாவது இடத்திலும், வாழ்க்கைத் தரத்தில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
அடுத்து சுவிட்சர்லாந்து, பயண வசதியில் ஏழாவது இடத்திலும், முதலீட்டில் இரண்டாவது இடத்திலும், வாழ்க்கைத் தரத்தில் 36வது இடத்திலும் உள்ளது.
மூன்றாவது இடத்தை பின்லாந்து பிடித்துள்ளது, இது பயண வசதியில் நான்காவது இடத்திலும், முதலீட்டில் 28வது இடத்திலும், வாழ்க்கைத் தரத்தில் முதல் இடத்திலும் உள்ளது.
நான்காவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. இது பயண வசதியில் 15 ஆவது இடத்திலும், முதலீட்டில் 20 ஆவது இடத்திலும், மற்றும் வாழ்க்கைத் தரத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
05ஆவது இடத்தில் நெதர்லாந்தும், டென்மார்க்கும் உள்ளன.
முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகளில் அயர்லாந்து, பிரித்தானியா, நோர்வே உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இதேவேளை இந்த குறியீட்டில் 10 ஆவது இடத்தை ஆசிய கண்டத்தை சேர்ந்த நாடான சிங்கப்பூர் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




