ICC தலைவராக மீண்டும் ஜெய் ஷா: போட்டியின்றிக் கிடைத்த அங்கீகாரம்
ஐசிசி நிர்வாகக் குழுவின் தலைமைப் பதவிக்கான பரிந்துரையில் வேறு எவரும் போட்டியிடாத நிலையில், ஜெய் ஷா போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி நிர்வாகக் குழு மற்றும் குழுக் கூட்டங்களைத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்துதல், ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் வர்த்தக ரீதியான வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஜெய் ஷாவின் தலைமைத்துவத்தின் மீது ஐசிசி நிர்வாகக் குழு கொண்டுள்ள நம்பிக்கையை இந்த மறுநியமனம் வெளிப்படுத்துவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
மீண்டும் நியமிக்கப்பட்டமைக்காக ஐசிசி நிர்வாகக் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜெய் ஷா, தனது தலைமைத்துவத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
2028ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது, புதிய ரசிகர்களைக் கவர்வதற்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதற்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட்டின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆதரவளித்தல், சர்வதேச ரீதியில் விளையாட்டை மேலும் விரிவுபடுத்துதல் ஆகியவை தனது முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் என்றும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.




