புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்த 5 ஐரோப்பிய நாடுகள் திட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்து, அவை நிராகரிக்கப்பட்டவர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கான திட்டத்தை ஐந்து ஐரோப்பிய நாடுகள் அறிவிக்கவுள்ளன.
ஜேர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்குவதற்கான அனைத்து சட்டரீதியான வாய்ப்புகளும் முடிவடைந்த பின்னரும் நாடு திரும்பாத புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவில் அமைக்கப்படும் விசேட மையத்தில் தங்கவைத்து, அவர்களைத் தாய்நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்றக் கொள்கை விதிமுறைகள், ஒன்றியத்துக்கு வெளியே இத்தகைய மீள்குடியேற்ற மையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
வியன்னாவில் நடைபெறும் குடியேற்றம் தொடர்பான மாநாட்டை முன்னிட்டு, இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், புகலிடக் கோரிக்கையாளர்களின் மனித உரிமைகள் பாதிக்கப்படலாம் என மனித உரிமை அமைப்புகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தங்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத மூன்றாவது நாடொன்றுக்கு அனுப்பப்படும் குடியேறிகளின் உரிமைகள் மீறப்பட்டால், அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வியையும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
இத்தகைய மையங்கள் மனித உரிமைகளுக்கு கணிசமான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என ஐரோப்பிய பேரவையும் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
பிரித்தானியா முன்னர் இதேபோன்ற திட்டமொன்றை முன்னெடுக்க முயன்றபோதும், சட்டரீதியான சிக்கல்களைத் தொடர்ந்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் பெருமளவிலான நாடு கடத்தல்களை மேற்கொள்வதை விட, சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதாகும் என இதற்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




