டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!! காரணம் என்ன?
மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையே ரூபாய் சரிவடைவதற்கு முக்கிய காரணம் என மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 330 ரூபாவை கடந்துள்ள நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நம்மைப் போலவே எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் உள்ளன. இந்த ஆண்டில் நமது ரூபா 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது, இந்திய ரூபா 6.4 சதவீதத்தினாலும், நேபாள ரூபா 6.2 சதவீதத்தினாலும், இந்தோனேசிய ரூபா 5.2 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனைப் பார்க்கும்போது, இந்த நாணய வீழ்ச்சியானது நம்மைப் போன்ற ஏனைய நாடுகளுக்கும் ஒரு பொதுவான விடயம் என்பது தெளிவாகப் புரிகிறது.
இதற்குக் காரணம், இவற்றில் பெரும்பாலானவை எண்ணெயை முழுமையாக இறக்குமதி செய்து, அதற்காக அதிக செலவு செய்யும் நாடுகளாகும்.
2022 ஆம் ஆண்டில் நிலவிய சூழ்நிலை, இலங்கைக்கு மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்திய காரணங்களினால் ஏற்பட்டது. அது உலகளாவிய காரணிகளால் அல்ல.
ஆனால், தற்போதைய நிலவரப்படி இலங்கை ஏனைய ஒப்பிடக்கூடிய நாடுகளுடன் ஓரளவு ஒரே மட்டத்திலேயே உள்ளது. எனவே, இது வெளிப்புற அதிர்வுகளால் ஏற்படும் ஒரு விடயமாகும்.
நாணய மாற்று விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு சில ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
நாணய மாற்று விகிதம் வீழ்ச்சியடைவதென்பது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைக் குறிப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். நமது பிரதான ஊடகவியலாளர்கள் அவ்வாறு செய்வதில்லை.
தற்போது இந்திய ரூபா வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலுள்ளது, இந்தோனேசிய ரூபாவும் இன்றைய தினம் வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்தைப் பதிவு செய்துள்ளது.
ஆனால், அதற்காக அந்த நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்றோ, ஸ்திரமற்றது என்றோ கூற முடியாது. அது ஒரு தவறான கருத்தாகும். நாணய மாற்று விகிதத்தை மாத்திரம் பார்த்து ஒரு நாட்டின் பொருளாதாரம் நல்லதா அல்லது கெட்டதா என்று கூறுவது கடினம். இதில் இரண்டு பக்கங்கள் உள்ளன.” என்றார்.




