29 வருடங்களுக்கு பிறகு படு மோசம்: தோல்விகளால் திணறும் இலங்கை
இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி, 2026ஆம் ஆண்டில் இதுவரை விளையாடிய சர்வதேச தொடர்கள் மற்றும் போட்டித் தொடர்களில் தொடர்ச்சியாக 8 முறை வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றத் தவறியுள்ளதுடன், இந்த ஆண்டில் ஒரு டெஸ்ட் வெற்றியைக்கூட பதிவு செய்ய முடியாத மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது.
இலங்கை அணியின் இந்த பின்னடைவு, வெள்ளிக்கிழமை (20) ராவல்பிண்டியில் பாகிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்டுகளால் தோல்வியடைந்து, டெஸ்ட் தொடரை 1-0 என இழந்ததன் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.
இதன் மூலம், 1997ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக இலங்கை அணி ஒரு ஆண்டில் டெஸ்ட் வெற்றியின்றி நிறைவுசெய்யும் நிலையை எதிர்கொண்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இலங்கை, 3 தோல்விகளையும் 3 சமநிலைகளையும் பதிவு செய்துள்ளது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ஐசிசி டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இலங்கை 9ஆம் இடத்துக்கு வீழ்ந்துள்ளதுடன், பாகிஸ்தான் 7ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை 9 அணிகளில் 8ஆம் இடத்தில் உள்ளது.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கையின் நிலைமை பின்னடைவைச் சந்தித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய இலங்கை, தற்போது 8ஆம் இடத்துக்கு வீழ்ந்துள்ளது.
T 20 சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ள இலங்கை, டெஸ்ட் மற்றும் T 20 ஆகிய இரு வடிவங்களிலும் முதல் 8 அணிகளுக்குள் இடம்பெறவில்லை.




