பயங்கர வாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு
தொழிற்சங்க நடவடிக்கை, போராட்டம் என்பவற்றைக்கூட பயங்கரவாத நடவடிக்கையாக காண்பிக்கும் வகையிலேயே பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில் ஏற்பாடு உள்ளது.”- என்று முன்னிலை சோஷலிசக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலமொன்றை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும்.
பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட ஜனநாயகத்தக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்படும் எனக் கூறி ஜனநாயகத்தின் பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள்தான் மேற்படி சட்டமூலத்தையும் முன்வைத்துள்ளனர்.
போராட்டம், தொழிற்சங்க நடவடிக்கை, அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை என்பவற்றைக்கூட பயங்கரவாத நடவடிக்கையாக புதிய சட்டமூலத்தின் பிரகாரம் காண்பிக்க முடியும். சிவில் நடவடிக்கைகளுக்கு ராணுவத்தை அழைப்பதற்குரிய ஏற்பாடும் உள்ளது.
அடக்குமுறை, ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தரப்பே இப்படியொரு சட்டமூலத்தை கொண்டுவருவதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.” – என்றர் துமிந்த நாகமுவ.




