கேரளாவில் பாஜக தலைமையகம் மீது கல்வீச்சு தாக்குதல்
கேரளாவிலுள்ள தங்களின் மாநிலத் தலைமையகத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக அன்று மாலையில், பாஜக் தேசிய செயற்குழு உறுப்பினரான பி. கே. கிருஷ்ணதாஸின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்விரு சம்பவங்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இருளின் மறைவில்” மாநில அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்பீடுகளுக்கே விடுக்கப்பட்ட சவால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“அரசியல் ரீதியாக ஒருவரை எதிர்கொள்ள முடியாதபோது வன்முறையில் ஈடுபடுவது ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணதாஸ் மீதான தாக்குதலையும், மாரார்ஜி பவன் (Mararji Bhavan) மீதான தாக்குதலையும் பாஜக வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலம் தழுவிய அளவில் வலுவான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், “வன்முறைக்கு முன் பாஜக ஒருபோதும் தலைவணங்காது” என்றும் அக் கட்சி கூறியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சமீபத்திய கொல்லம் வருகையின் போது அவருக்கு எதிராக நடத்தப்பட்ட கருப்புக்கொடிப் போராட்டத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இச்சம்பவம் நடந்துள்ளது.




