விசிட் விசா மூலம் வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை
விசிட் vist விசா மூலம் வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேசியா, துபாய் மற்றும் ஓமான் போன்ற நாடுகளுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற வாக்குறுதிகளை நம்பி, ‘விசிட் விசா’ (Visit Visa) மூலம் சென்ற பலர் தற்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவ் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
‘விசிட் விசா’ என்பது ‘வேலைவாய்ப்பு விசா’ (Work Visa) அல்ல என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சு, பொதுமக்கள் தங்கள் பணம், வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்க வேண்டாம் என்றும், கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குச் செல்லும்போது சட்டப்பூர்வ நடைமுறைகளை மட்டுமே பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விசிட் விசா மூலம் வெளிநாடு சென்றவர்கள் அங்கு சந்திக்கும் ஆபத்தகளை சிறப்பு அறிக்கையின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளது.
அவை வருமாறு,
• உள்ளூர் சட்டங்களின்படி ‘விசிட் விசா’வில் வேலை செய்வது குற்றமாகக் கருதப்படலாம் என்பதால், சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுதல் அல்லது கைது செய்யப்படுதல்.
• வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் போதல்.
• ஊதியம் கிடைக்காமல் போதல் அல்லது வாக்குறுதி அளிக்கப்பட்டதை விடக் குறைவான ஊதியத்தைப் பெறுதல்.
• மோசடி மற்றும் மனிதக் கடத்தலுக்கு (Human Trafficking) ஆளாகுதல்.
• தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுதல் மற்றும்/அல்லது நாடு கடத்தப்படுதல்.
• கடவுச்சீட்டை (Passport) இழத்தல்.
• பணத்தை இழத்தல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகுதல் ஆகியவற்றுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




