ஐரோப்பாவில் அமைதியை நிலைநாட்ட சில நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்க வேண்டும் – போப் லியோ
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், ஐரோப்பாவில் போரை நிறுத்த முயலும் பேச்சுவார்த்தையாளர்கள் அமைதியை நிலைநாட்டத் தங்கள் சில நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று போப் லியோ வலியுறுத்தியுள்ளார்.
பிரான்சின் வடகிழக்கு நகரமான மெட்ஸில் (Metz) பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், இது ஒரு புதிய அர்த்தமற்ற படுகொலை. இது ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பொதுமக்களின் உயிரைப் பறிக்கிறது” என்று வேதனை தெரிவித்தார்.
ஐரோப்பாவுக்கான தனது மிகத் தெளிவான அரசியல் பார்வையை முன்வைத்த லியோ, தீவிர வலதுசாரி சக்திகள் இப்பகுதி முழுவதும் வலுப்பெற்று வரும் சூழலில், ஒருங்கிணைப்பு மற்றும் பல்லின கலாச்சாரக் கொள்கைகளை பாராட்டியுள்ளார்.
மேலும் சட்டத்தின் ஆட்சி மற்றும் இனம், நிறம், வர்க்கம் அல்லது தொழில் வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சமத்துவம் அளித்தல் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஐரோப்பியர்கள் நினைவுகூர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகள் நெருக்கடியில் இருப்பதாகவும், சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் வெறும் “நாடகமாக” மாறிவிடும் அபாயம் இருப்பதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.




