இந்தியா உலகம் செய்தி

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் வலுப்பெறுகிறது குவாட் கூட்டாண்மை

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலிகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நம்பகமான தீர்வுகளை வழங்குவதற்காகச் செயற்படும் ஆக்கபூர்வமான கூட்டாண்மையாக குவாட் அமைப்பு திகழ்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலிகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நம்பகமான தீர்வுகளை வழங்குவதற்காகச் செயற்படும் ஆக்கபூர்வமான கூட்டாண்மையாக குவாட் அமைப்பு திகழ்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையே குவாட் தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஐந்து தடவைகள் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இது, கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான அரசியல் விருப்பத்தையும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், குவாட் என்பது இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலிகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் நம்பகமான தீர்வுகளை வழங்குவதற்கான ஆக்கபூர்வமான கூட்டாண்மையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முன்னேற்றத்துக்கான பங்காளியாகவும், நெருக்கடியான காலங்களில் நம்பிக்கைக்குரிய நண்பராகவும், எதிர்காலத்துக்கான நம்பிக்கையின் ஊற்றாகவும் குவாட் அமைப்பு தொடர்ந்து செயற்படும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், முதலாவது குவாட் வர்த்தகத் தலைவர்கள் மன்றம் 2027ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்படும் என்றும் மோடி அறிவித்தார். தற்போதைய சந்திப்பானது, உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான உறுதியான இலக்குகளை நிர்ணயிக்க உதவும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதனிடையே, குவாட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நான்கு முக்கிய தீர்மானங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகிய நான்கு முக்கிய துறைகளில் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய ட்ரம்ப், நான்கு நாடுகளையும் உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

சுதந்திரமான, திறந்த, நிலையான மற்றும் செழிப்பான இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் நான்கு முக்கிய தூண்களாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்தியப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர உறவுகள் உள்ளிட்ட விடயங்களில் நான்கு நாடுகளும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி