சிங்கப்பூரை சிதறடித்த பிரேசில்: 7 கோல்கள் அடித்து அபார வெற்றி
சிங்கப்பூருக்கு எதிரான சர்வதேச நட்புறவு கால்பந்துப் போட்டியில் பிரேசில் அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் முதல் பாதியிலேயே ஹெட்ரிக் கோல்களைப் பதிவு செய்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
போட்டியின் 9ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் பதிவு செய்த வினிசியஸ், 15ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் அடித்தார். தொடர்ந்து 21ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலைப் பதிவு செய்து ஹெட்ரிக் சாதனையை நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, 31ஆவது நிமிடத்தில் எண்ட்ரிக் கோல் அடித்து பிரேசில் அணியின் முன்னிலையை 4-0 ஆக உயர்த்தினார்.
இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமானதும் 46ஆவது நிமிடத்திற்குப் பின்னர் எஸ்டேவோ மேலும் ஒரு கோலைப் பதிவு செய்தார்.
போட்டியின் 65ஆவது நிமிடத்தில் ரயான் ஆறாவது கோலையும், 74ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய அலன் ஏழாவது கோலையும் அடித்தனர்.
இதன்மூலம் பிரேசில் அணி 7-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
முன்னதாக ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்த பிரேசில் அணி, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உலகக் கிண்ணத்தை ஐந்து முறை வென்றுள்ள பிரேசில் அணி, இந்தப் போட்டியில் வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டம் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




