அமைதி பேச்சுக்கான கதவு திறந்தே உள்ளது: உக்ரைனுக்கு பச்சைக்கொடி காட்டிய புடின்
உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து அமைதி முன்மொழிவுகளும் இன்னும் பரிசீலனையில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடின் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டின் நலனுக்கு எது சிறந்தது என்பதை ரஷ்யா மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உக்ரைன் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க ரஷ்யா தயாராக இருந்ததாகவும், ஆனால் உக்ரைன் ரஷ்ய நகரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் புடின் குற்றம் சாட்டினார்.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனே இத்தகைய தூண்டுதல் தாக்குதல்களைத் தொடங்கியதாகவும், அதற்கான ரஷ்யாவின் தொடர் பதிலடிக்கு அவர்கள் விலை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
“அவர்களே இதைத் தொடங்கினார்கள். எல்லா இடங்களிலும், ஒவ்வொரு முனையிலும் தாக்குதல் நடத்தினர். இதெல்லாம் என்ன விளையாட்டுப் பொருளா? குழந்தைகள் விளையாட்டா? எனவே ரஷ்யாவின் பதிலடித் தாக்குதல்களை அவர்கள் உணர வேண்டும்.
சூழலைச் சீர்குலைத்துத் தங்களுக்குச் சாதகமான முடிவைப் பெறலாம் என்ற கணக்கு பலிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தங்களுக்குத் தானே நிலைமையை மோசமாக்கிக் கொள்கிறார்கள்” என்று புடின் தெரிவித்தார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்துக் குறிப்பிட்ட புடின், வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே எட்டப்படும் எந்தவொரு சாதகமான உடன்பாட்டையும் ரஷ்யா வரவேற்பதாகத் தெரிவித்தார்.
மேலும், சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் தான் பங்கேற்பது ரஷ்யாவின் உள்நாட்டுச் சூழல்களைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் கூறினார்.




