ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துமாறு நாடுகளுக்கு அழுத்தம்
ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துமாறு நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, உலகெங்கிலும் தூதர்களை அனுப்பியதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் Scott Bessent தெரிவித்துள்ளார்.
மேலும், அந்நாட்டின் விமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை இலக்காகக் கொண்ட புதிய கட்டுப்பாடுகளையும் அவர் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனது வழிகாட்டுதலின் பேரில், நாடுகளுடன் கலந்துரையாடுவதற்கும் ஈரானிய ஆட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவதற்கும் உலகெங்கிலும் குழுக்கள் அனுப்பப்பட்டன,”எனக் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் தனியார் விமான நிறுவனமான மஹான் ஏர் வழங்கும் உள்வரும் விமானங்களை நிறுத்தியுள்ளன என்றும், அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானிய விமான நிறுவனங்களின் அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புதிய வங்கிக் கட்டுப்பாடுகளையும் பெசென்ட் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக செப்டம்பர் 23 அன்று, பணமோசடி, பயங்கரவாதம் மற்றும் ஆயுதப் பெருக்கம் தொடர்பான சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டி, ஈரானின் பேங்க் மெல்லி கிளைகள் மூலம் ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் பரிவர்த்தனைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி தடுத்து நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




