இலங்கை செய்தி

மகா சங்கத்தினருடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு: நடந்தது என்ன?

பிக்குமார் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் சிறைச்சாலைகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் காணப்படும் சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் சமர்ப்பிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பிக்குமார் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் சிறைச்சாலைகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் காணப்படும் சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் சமர்ப்பிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சட்டமா அதிபர், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் குறித்த குழு நியமிக்கப்படும் எனவும், இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து திருத்தங்களைச் சமர்ப்பிக்குமாறு அக்குழுவிற்குப் பொறுப்பு வழங்கப்படுவதாகவும், அதில் பிக்குமார்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகள் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடி அதற்கேற்ப மாற்றியமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவ்வாறின்றி, சட்டங்கள் இருக்கின்ற போது, தனிப்பட்ட நபர்களுக்காக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தான் தயாராக இல்லை என்றும், சட்டம் தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லையென்றால் உரிய வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதே உகந்தது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று (08) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மகா சங்கத்தினருடன் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார் .

பிக்குமார்  சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் சிறைச்சாலைகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் காணப்படும் சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் சமர்ப்பிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

வண. கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையைக் களைந்து சாதாரண உடையுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதம் மற்றும் இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை, இதுபோன்ற நிலைமைகளைத் தவிர்ப்பது தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தமது அழைப்பை ஏற்று இச்சந்திப்பில் கலந்துகொண்டமைக்கு மகா சங்கத்தினருக்கு ஜனாதிபதி இதன்போது தனது நன்றியையும் கௌரவத்தையும் தெரிவித்தார்.

இதன்போது, தற்போதைய சிறைச்சாலை சட்டக் கட்டமைப்பு தொடர்பில் தொடர்ந்தும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

“1877 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் மூலமே தற்போது நமது சிறைச்சாலைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அந்த சட்டம் அவ்வப்போது திருத்தப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தின் 94 ஆவது பிரிவின் மூலம் அமைச்சருக்கு அவ்வப்போது விதிமுறைகளை பிறப்பிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், 2022 ஆம் ஆண்டிலேயே குறித்த விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன.

அத்துடன், சிறைச்சாலைகளைப் பராமரிப்பதற்காக அமைச்சரின் அனுமதியுடன் நிலையான கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கான அதிகாரம் சிறைச்சாலை ஆணையாளருக்கு உண்டு.

அதன்படி, சிறைச்சாலைக் கட்டமைப்பானது ஒரு சட்டத்தினாலும், அமைச்சரால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகளாலும் மற்றும் அமைச்சரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு ஆணையாளரால் பிறப்பிக்கப்படும் நிலையான கட்டளைகளாலும் நிர்வகிக்கப்படுகிறது.

ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர, பொதுவான கைதிகள் தொடர்பிலேயே இந்த திருத்தங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது . 216 ஆவது விதிமுறைப் பிரிவில் மாத்திரமே குறிப்பாக நமது பிக்குமார்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சட்டங்களைத் தயாரிக்கும்போது தேரர்களையோ அல்லது ஏனைய மதத் தலைவர்களையோ மையப்படுத்தி விசேட விதிமுறைகள் தயாரிக்கப்படவில்லை. எப்போதும் பொதுவான கைதிகள் தொடர்பில்தான் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் இரு வகையில் கைதிகள் தடுத்து வைக்கப்படுகின்றனர். ஒன்று, நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படாது விளக்கமறியலில் வைக்கப்படுபவர்கள், விளக்கமறியலில் இருக்கும் பிக்குமார்கள் தொடர்பில் இத்தகைய சிக்கல் எழுவதில்லை.

ஆயினும், நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படும் தண்டனை கைதிகள் தொடர்பில் நிலைமை மாறுகிறது. அங்கு கடூழிய சிறைத்தண்டனை மற்றும் சாதாரண சிறைத்தண்டனை என இரு வகைகள் உள்ளன.

சாதாரண சிறைத்தண்டனையின் போது சிறைச்சாலை அதிகாரியின் உடன்பாட்டுடன் ஆடையைத் தெரிவு செய்ய முடியுமென்றாலும், கடூழிய சிறைத்தண்டனையின் போது சிறைச்சாலையிலிருந்து வழங்கப்படும் உரிய ஆடையையே அணிய வேண்டும். இதுவரை காலமும் அவ்விதிக்கு அமையவே செயற்பட்டுள்ளது.

 

அதன்படி, மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதத்திற்கு அமைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முறையை விட, அவர்கள் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களிலேயே பிரச்சினை எழுகிறது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மட்டுமல்லாமல், சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் இதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும். ஏனெனில், சிறைச்சாலைக்கு உள்ளே திறந்த வெளி அல்லாத இடமாக இருந்தாலும், வெளியே அழைத்துச் செல்லும்போது அதனை ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் காண்கின்றனர்.

இவர்களை வெளியே அழைத்து வரும்போது வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இதற்கு முன்னரும் ஆராய்ந்துள்ளதோடு தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 63 தேரர்கள் குறித்தும் நான் கவனம் செலுத்தினேன்.

சில பிக்குமாகள் ஒரு குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவிக்கும் போது, வேறு வழக்குகளுடன் தொடர்புடையவர்களாயின் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டியுள்ளது. தற்போது சிறையில் இருக்கும் சில தேரர்கள் வேறு வழக்குகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பது கூட அவர்களின் காவி உடை அணிந்த நிலையிலல்ல. சிறைச்சாலை அதிகாரிகள் தற்போதைய சட்ட மற்றும் விதிமுறைகளின்படியே செயற்பட்டுள்ளதால் அவர்களைக் குற்றம் சாட்டுவதில் எந்தப் பயனுமில்லை.

நேற்று வணங்கி வழிபட்ட தேரர் ஒருவரை இன்று வேறு விதமாகக் காண நேரிடுவது பௌத்த மக்களுக்கும் மகா சங்கத்தினருக்கும் கடுமையான அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும், நடைபெற்ற செயல்முறை இதுதான்.

சட்டங்கள் என்பவை எக்காலமும் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் மறுக்க முடியாத வரலாற்று நிகழ்வுகள் அல்ல, சட்டங்கள் அடிக்கடி திருத்தப்படுகின்றன. அவ்வாறில்லாமல், சட்டங்கள் அவ்வாறு இருக்கையில், ‘இவ்வாறு செய்யுங்கள்’ என்று கட்டளையிட நான் விரும்பவில்லை. அப்படியானால் சட்டம் ஒருபுறம் இருக்க, அது எனது சட்டமாக மாறிவிடும். எனது விருப்பம் சட்டமாக மாறக்கூடாது. சாதாரண அரசியலில் ‘சட்டம் என்பது ஆட்சியாளரின் விருப்பமாகும்’ என்று கூறப்பட்டாலும், எனது விருப்பத்தைச் சட்டமாக மாற்றிக்கொள்ள நான் எக்காலத்திலும் விரும்பவில்லை.

சட்டம் தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டால் , உரிய முறையில் சட்டத்தை இயற்றிக்கொள்வதைத் தவிர, நமது விருப்பத்தின்படி சட்டத்தைச் செயற்படுத்துவது உகந்ததல்ல. எனவே, தற்போதுள்ள இந்த விதிமுறைகளும் சிறைச்சாலை நிலையான கட்டளைகளும் தற்கால நிலைமைக்குப் பொருந்தும் வகையில் மாற்றப்பட வேண்டும். இத்தகைய கலந்துரையாடல்களில்தான் இதுபோன்ற விடயங்கள் எழுகின்றன. எப்பொழுதும் இந்தச் சட்டங்கள் பொதுவான சூழ்நிலைகளுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளனவே தவிர, பௌத்த பிக்குமார்களுக்காக விசேட கட்டளைகள் குறைவாகவே உள்ளன.

பிக்குமார்கள் சிறைவாசம் அனுபவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படாததால் அத்தகைய விதிமுறைகள் சேர்க்கப்பட்டிருக்காது. ஆனால், தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் பிக்குமார்களும் ஆளாகியிருப்பதாகத் தெரிகிறது. எனவே, சிறைச்சாலையில் தங்கியிருக்கும் விதம் மற்றும் சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்படும் விதம் தொடர்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அது ஒரு தேரரை இலக்கு வைத்து அல்லாமல், பொதுவாக ஒட்டுமொத்த முறைமைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதுபோன்ற சிக்கலான விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தி உடனடித் தீர்வுகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தமைக்காக மகாநாயக்க தேரர்களின் சார்பில் இங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்குத் தமது நன்றியுடன் கூடிய ஆசீர்வாதங்களைத் தெரிவித்தனர்.

சியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரி தரப்பு அனுநாயக்க வண, நாரம்பனாவே ஆனந்த தேரர், சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விஹார தரப்பு பிரதம பதிவாளர் வண, பஹமுணே ஸ்ரீ சுமங்கல தேரர், பிரதி பதிவாளர் வண, மஹவெல ஸ்ரீ ரதனபால தேரர், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் பிரதம பதிவாளர் ராஜகீய பண்டித தர்சனபதி வண, பலபிட்டியே சிரிசீவலி தேரர், பிரதி பதிவாளர் வண, அஹங்கம மைத்திரிமூர்த்தி தேரர், இலங்கை ராமஞ்ஞ மகா நிக்காயவின் பிரதம பதிவாளர் வண, அத்தங்கனே சாசன ரதன தேரர், வண, கொங்கஸ்தென்னே ஆனந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை