ரஷ்யாவில் பிளேக் நோய் அச்சுறுத்தல் – 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில்
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஆய்வக ஊழியர் ஒருவர் பிளேக் (plague) நோயால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாரியா ஷா (Daria Sh.) என்று அடையாளம் காணப்பட்ட 28 வயதுடைய பெண் இர்குட்ஸ்க் (Irkutsk) பகுதியில் உள்ள பிளேக் தடுப்பு ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடுமையான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து ஷெலேகோவ் (Shelekhov) நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டர் (செயற்கை சுவாசக் கருவி) உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்கு எந்த வகையான பிளேக் நோய் ஏற்பட்டது என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிலர் இது ‘புபோனிக் பிளேக்’ (bubonic plague) என்று குறிப்பிட்ட நிலையில், வேறு சிலர் அவருக்கு ‘நியூமோனிக் பிளேக்’ (pneumonic plague) எனத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
அந்தப் பெண்ணின் இறப்பைத் தொடர்ந்து, ஷெலேகோவ் மாவட்ட மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டது (quarantine).
அவருடன் தொடர்பில் இருந்திருக்கக்கூடிய குறைந்தது 197 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




