செய்தி விளையாட்டு

19 ஆண்டுகால ஐ.பி.எல் பயணத்துக்கு விடைகொடுத்தார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி, தனது 19 ஆண்டுகால ஐ.பி.எல் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன், 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டியாக (Mentor) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி, தனது 19 ஆண்டுகால ஐ.பி.எல் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன், 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டியாக (Mentor) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்று (17) வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 16ஆம் திகதி கோவாவில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்துக்கு முன்னதாக, வீரர்களைத் தக்கவைத்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பான அறிவிப்புக்கான காலக்கெடு நிறைவடைவதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில், ரசிகர்கள் முன்னிலையில் தனது ஐ.பி.எல் பயணத்தை நிறைவுசெய்ய விரும்புவதாக தோனி பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார். எனினும், அவரது கிரிக்கெட் பயணம் எதிர்பார்த்த வகையில் நிறைவடையவில்லை.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன், தோனி இல்லாமல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தோனியை சென்னை அணி வாங்கியது. அதன் பின்னர் அணியின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த அவர், 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் சென்னை அணிக்கு ஐந்து ஐ.பி.எல் சம்பியன் பட்டங்களை வென்று கொடுத்தார்.

மேலும், 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் சென்னை அணி வென்றதில் தோனி முக்கிய பங்காற்றினார்.

ஐ.பி.எல் தொடரின் முதல் 19 பருவகாலங்களில் 17 பருவகாலங்கள் சென்னை அணிக்காக விளையாடிய தோனி, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சென்னை அணி தடைவிதிக்கப்பட்டிருந்ததால் ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடினார்.

தனது ஐ.பி.எல் கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாக 5,439 ஓட்டங்களைக் குவித்துள்ள அவர், 38.30 என்ற துடுப்பாட்ட சராசரியையும் 137.45 என்ற துடுப்பாட்ட வேகத்தையும் பதிவு செய்துள்ளார்.

சென்னை அணியை 12 பருவகாலங்களில் வழிநடத்திய தோனி, 2022ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜாவிடம் அணித்தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார். எனினும், அணியின் மோசமான பெறுபேறுகளைத் தொடர்ந்து அதே பருவகாலத்தின் இடைநடுவில் மீண்டும் அணித்தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அவரது தலைமையில் 2023ஆம் ஆண்டு சென்னை அணி மீண்டும் சம்பியன் பட்டத்தை வென்றது. 2024ஆம் ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் அணித்தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.

2025ஆம் ஆண்டு கெய்க்வாட் காயமடைந்ததைத் தொடர்ந்து தோனி மீண்டும் அணித்தலைமைப் பொறுப்பை ஏற்றபோதிலும், சென்னை அணி அந்தப் பருவகாலத்தில் கடைசி இடத்தைப் பிடித்தது.

2026ஆம் ஆண்டு காயம் காரணமாக தோனி எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.

இந்நிலையில், 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள சென்னை அணியின் பயிற்சிக் குழுவில் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜாகீர் கானும், உதவிப் பயிற்றுவிப்பாளர்களாக அல்பி மோர்கல், கரேத் பட்டி மற்றும் ஸ்ரீதரன் ஸ்ரீராமும் இடம்பெற்றுள்ளனர். பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக மொஹித் சர்மாவும், களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஜேம்ஸ் ஃபோஸ்டரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இனிவரும் காலங்களில் வீரராகக் களமிறங்காமல், வழிகாட்டியாக சென்னை அணியுடன் தோனி தனது பயணத்தைத் தொடரவுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி