“முதலில் அமைதி” – வடகொரியாவுடன் உறவை புதுப்பிக்க தென்கொரியா முனைப்பு
வட கொரியாவுடனான உறவில், ‘முதலில் அணு ஆயுத ஒழிப்பு’ என்ற கொள்கையைக் கைவிட்டு, ‘முதலில் அமைதி’ என்ற அணுகுமுறையை தென் கொரியா பின்பற்றுவதாக ஒருங்கிணைப்பு அமைச்சர் சுங் டோங்-யங் (Chung Dong-young) தெரிவித்துள்ளார்.
அதே சமயம் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்றதாக மாற்றும் இறுதி இலக்கை அந்நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அணு ஆயுத ஒழிப்பு என்ற இறுதி இலக்கு கைவிடப்படவில்லை, ஆனால் ‘முதலில் அணு ஆயுத ஒழிப்பு’ என்ற கொள்கை கைவிடப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்தை ஆரம்பத்தில் முடக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உத்தியை தென் கொரியா உருவாக்கி வருகிறது என்றும், தொடர்ச்சியான தாமதங்கள் பியோங்யாங் தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்த அனுமதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வட கொரியா, நிலத்தடி யுரேனியம் செறிவூட்டும் நிலையங்களில் மையவிலக்கு இயந்திரங்களையும், யோங்பியோனில் உள்ள ஒரு நிலையத்தில் புளூட்டோனியம் உற்பத்தி செய்யும் அணு உலையையும் இன்னும் இயக்கி வருகிறது.
அதே நேரத்தில் அதன் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
ஏழு ஆண்டுகளாக கொரிய நாடுகளுக்கு இடையேயான முறையான பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டிருந்த நேரத்தில், ஆரம்பத்திலேயே அணு ஆயுத ஒழிப்பைக் கோரியது பேச்சுவார்த்தைகளைத் தடுத்தது என்று சுங் சுட்டிக்காட்டினார்.




