அரச தலைவராக கால்நூற்றாண்டை கடந்த மோடி: அமைச்சரவை பாராட்டு
குஜராத் முதல்வர் மற்றும் பிரதமர் இந்தியாவின் எனத் தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் பொதுச்சேவை செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவையில் நேற்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:
“‘தேசத்திற்கு முன்னுரிமை, குடிமக்களுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் கீழ் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தைப் பாராட்டி இத்தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது, சமூக அதிகாரமளித்தல், தற்சார்பு இந்தியா, பயங்கரவாத எதிர்ப்பு, உலக அரங்கில் இந்தியாவின் குரலை வலுப்படுத்தியது மற்றும் ‘வளர்ந்த இந்தியா 2047’ தொலைநோக்கு பார்வை உட்பட 10 முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்றார்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) நீண்டகாலப் பங்கு மூலதனத்தை வழங்கி, உலக அளவில் போட்டியிடும் புதிய தலைமுறை நிறுவனங்களை உருவாக்கும் நோக்கில் ரூ.10,000 கோடி SME வளர்ச்சி நிதியை அமைக்கவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி நேரடியாக நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்யும்.
அதேவேளை, அரச தலைவராகத் தனது 25 ஆண்டுகாலப் பயணத்தைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை டெல்லியின் சரோஜினி நகரிலுள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.




