மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி பிரான்ஸ் சாதனை
பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸ் அணி உலகக் கோப்பை 2026 (FIFA World Cup 2026 ) அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்திலும் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனது அசாத்திய திறமையால் பிரதான தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
ஆட்டத்தின் முதல் பாதியில் தனக்குக் கிடைத்த பெனால்டி (Penalty) வாய்ப்பைத் தவறவிட்ட எம்பாப்பே, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து இந்தத் தொடரில் தனது 8ஆவது கோலை அடித்தார்.
அதுமட்டுமன்றி, உஸ்மான் டெம்பேலே (Ousmane Dembele) தனது 5ஆவது கோலை அடிப்பதற்கும் அவர் வழிவகுத்தார்.
இதன் மூலம் இரண்டு முறை உலக சாம்பியனான பிரான்ஸ் அணி, அரையிறுதியில் பெல்ஜியம் அல்லது ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
ஆட்டம் தொடங்கிய 5ஆவது நிமிடத்திலேயே பிரான்ஸ் வீரர் டாயோட் உபமேகானோ (Dayot Upamecano) அடித்த ‘ஹெடர்’ (Header) பந்தை மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோ (Yassine Bounou) தடுத்து நிறுத்தினார்.
தொடக்கம் முதலே ஆட்டத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரான்ஸ் அணிக்கு, மொராக்கோ வீரர் நுஸைர் மஸ்ரௌயி எம்பாப்பேயை பவுல் செய்ததால் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே உதைத்த அந்தப் பந்தை யாசின் போனோ மிகச் சிறப்பாகத் தடுத்து நிறுத்தியதால், முதல் பாதி ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில், மைதானத்தின் எல்லைப் பகுதியிலிருந்து எம்பாப்பே அடித்த அசாத்தியமான கோல் பிரான்ஸ் அணிக்கு முன்னிலையைப் பெற்றுத் தந்தது.
அடுத்த சில நிமிடங்களில், எம்பாப்பே கொடுத்த சாதுரியமான பாஸிங் (Passing) உதவியுடன் உஸ்மான் டெம்பேலே பந்தை மிகத் துல்லியமாகக் கோலாக மாற்றினார்.
இதன் மூலம் திடியர் டெசாம்ப்ஸ் (Didier Deschamps) தலைமையிலான பிரான்ஸ் அணி, 2018 இல் சாம்பியன் பட்டம் மற்றும் 2022 கத்தாரில் இரண்டாம் இடம் ஆகியவற்றைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.




