முடிவுக்கு வருமா இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை? ஜனவரி 22 டெல்லியில் உயர்மட்ட பேச்சு
இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், இரு நாடுகளினதும் அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவின் டெல்லியில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இலங்கை கடற்றொழில் தொடர்பான கூட்டுச் செயற்குழுக் கூட்டமாக நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில், இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையைப் பயன்படுத்துதல் மற்றும் இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன.
இலங்கை கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸ், கடலோரக் காவல்படை, வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.
இப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் தமிழக அரச தரப்பினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.




