தேர்தல் சட்ட திருத்தத்துக்கு இத்தாலி நாடாளுமன்றம் ஒப்புதல்
இத்தாலியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான கட்டமைப்பை வழங்கும் வகையில், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியால் (Giorgia Meloni) கொண்டுவரப்பட்ட தீவிர விவாதத்திற்குரிய தேர்தல் சீர்திருத்த சட்டமூலத்துக்கு அந்நாட்டின் நாடாளுமன்றக் கீழவை வியாழக்கிழமை (08) இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதே இந்நியமங்களின் நோக்கம் என பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தேர்தலில் தனது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலேயே இச்சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இடதுசாரி எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இதில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 227 வாக்குகளும் எதிராக 164 வாக்குகளும் கிடைத்தன.
புதிய விதிமுறைகளின்படி, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை (Proportional Representation) முழுமையாக அறிமுகப்படுத்தப்படுவதுடன், 42 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் கூட்டணிக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மையை உறுதி செய்யும் ‘கூடுதல் இடங்களுக்கான போனஸ்’ (Seat bonus) வழங்கப்படவுள்ளது.
முந்தைய விதிமுறைகளின்படி, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விகிதாசார முறையிலும், மீதமுள்ளவர்கள் தொகுதிச் தேர்தல் (First-past-the-post) முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப் பழைய முறைமை எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக இருந்ததாகப் பகுப்பாய்வாளர்கள் கருதினர்.
வாக்கெடுப்பிற்குப் பிறகு ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மெலோனி, “எந்தவொரு அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையையும் நாடாளுமன்ற ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் வகையில் இந்நியமங்களை அறிமுகப்படுத்துகிறோம். தேர்தலில் வெற்றிபெறுபவர் ஆட்சி அமைக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.




