இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் நிதிப்பிரிவு தலைவர் பலி
தெற்கு காஸாவின் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸின் நிதிப் பிரிவின் தலைவர் என விவரிக்கப்படும் முகமது அபு அல்வான் (Mohammad Abu Alwan) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ அறிக்கையின்படி, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்தப் பகுதியில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கிய அபு அல்வான், “ஹமாஸின் அனைத்துக் கிளைகளுக்குமான வரவுசெலவுத் திட்டத்தை (budgeting) தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக இவரது வழிகாட்டலின் கீழ் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஷேகல்கள் (சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ள இராணுவம், “ஹமாஸின் ஆட்சி அதிகாரத்தையும் அதன் இருப்பையும் தக்கவைப்பதில் இவர் ஒரு தீர்மானமிக்க காரணியாகச் செயல்பட்டார்” என்றும் குறிப்பிட்டுள்ளது.




