இலங்கைக்கு 15 மைல் தொலைவில் சிக்கியுள்ள ஈரானின் எண்ணெய் கப்பல்கள்
சுமார் 20 ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து 15 மைல் தொலைவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் சில கப்பல்களில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கப்பல்கள், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட ஈரானிய கச்சா எண்ணெயை சீனாவுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஈரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை அமெரிக்க அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
வழக்கமாக, இக்கப்பல்கள் ஈரானிய கச்சா எண்ணெயை மலேசியாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதிக்குக் கொண்டு சென்று, அங்குள்ள பிற கப்பல்களுக்கு மாற்றிய பின்னர் சீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பும்.
சுத்திகரிப்பு நிலையங்களில் சரக்கை இறக்கிய பிறகு, அடுத்தகட்ட சரக்கை ஏற்றுவதற்காக இக்கப்பல்கள் ஈரான் திரும்புவதுண்டு.
ஆனால், அமெரிக்காவின் முற்றுகை மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகள் இந்தச் சுழற்சியைப் பாதித்துள்ளன; இதனால், சில காலி கப்பல்களால் ஈரான் துறைமுகங்களுக்குத் திரும்ப முடியாமலோ அல்லது திரும்ப விரும்பாமலோ உள்ள நிலை ஏற்பட்டுள்ளது.




