ஆஸ்திரேலியாவில் சிறைச்சாலையாக மாறும் COVID-19 தடுப்பு மையம்
மேற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் (COVID-19) பெருந்தொற்று காலத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தைச் சிறைச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன.
இதனைத் தேவைக்கேற்ப மறுசீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய நீதித்துறை சார்பில் கட்டிடக் கலை வல்லுநர்கள் (Architects) அழைக்கப்பட்டுள்ளனர்.
பெர்த் நகரின் மையப்பகுதியில் இருந்து வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, 500 படுக்கைகள் கொண்ட இந்த ‘தேசிய மீள்தன்மை மையம்’ (Centre for National Resilience), 2022-இல் கட்டி முடிக்கப்பட்டதில் இருந்தே பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது.
மாநிலத்தில் உள்ள சிறைகளில் நிலவும் இடநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், இந்த மையத்தைச் சிறையாகப் பயன்படுத்துவது குறித்து நீதித்துறை பரிசீலித்து வருவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, ஹாண்டா வைரசால் (hantavirus) பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட 6 பயணிகள் தங்குவதற்காக, கடந்த மாதம் இம்மையம் முதன்முறையாகத் தனிமைப்படுத்தல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தேசிய அளவிலான ‘காக்ஸ் ஆர்க்கிடெக்சர்’ (Cox Architecture) நிறுவனத்துடன் 86,955 டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை நீதித்துறை கடந்த வாரம் கையெழுத்திட்டுள்ளது.
‘தேசிய மீள்தன்மை மையத்தை மறுசீரமைத்தல்’ என்ற பெயரிலான இந்த ஒப்பந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறும்.
இது குறித்து நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஒரு மையத்தை மாற்று நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் வழக்கமான ஆய்வுப் பணிகளின் ஒரு பகுதியே இந்த ஒப்பந்தம்.
அதிகரித்து வரும் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைத் துறை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது” என்றார்.
மேற்கு ஆஸ்திரேலியச் சிறைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி காரணமாக, கைதிகள் சிலர் மனிதநேயமற்ற மற்றும் அவமதிப்பிற்குரிய சூழலில் நடத்தப்படுவதாகக் காவல் துறை ஆய்வுத் தலைவர் (Inspector of Custodial Services) ஏமன் ரியான் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கைதிகளின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளதே இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம் என்றும், ஆனால் அதற்கேற்ப சிறை அறைகளோ அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையோ உயர்த்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட் காலத்தில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்திருந்ததும், தற்போது குடும்ப வன்முறைச் வழக்குகளில் கைது செய்யப்பட்டுத் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதுமே இந்த உடனடி அதிகரிப்பிற்குக் காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.




