ஹவுதிகளின் தாக்குதல் தீவிரம்: சவூதி பட்டத்து இளவரசருக்கு பலத்த பாதுகாப்பு
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் பாதுகாப்பு பங்கர்கள் (Bunkers) அமைக்கப்பட்ட அதிநவீனப் பாதுகாப்புமிக்க அரண்மனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது கடந்த ஒரு தசாப்த காலத்தில் சவூதி அரேபியா சந்தித்த மிக மோசமான தாக்குதலாகும்.
ஹவுதிகளுக்கு எதிரான சவூதியின் வான்வழித் தாக்குதலில் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், ரியாத்தின் ‘மக்கா உடன்படிக்கை’ (Mecca Pact) நட்பு நாடுகளும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
41 வயதான இளவரசர் சல்மான், கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய இரத்த தான முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்த பின்னர் பகிரங்கமாக எங்கும் தோன்றவில்லை.
அதன் பின்னர், தீவிரமடைந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பங்கர்களுடன் கூடிய பலத்த பாதுகாப்பு நிறைந்த அரண்மனைகளுக்கு இடையே அவர் மாற்றப்பட்டு வருவதாக இளவரசரின் நகர்வுகளைப் பற்றி அறிந்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சிறப்புத் தேர்வு செய்யப்பட்ட பாதுகாப்புக் குழுவொன்று அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது.
இது குறித்து கருத்து அறிவதற்காக ‘தி இண்டிக்பென்டன்ட்’ (The Independent) ஊடகம் சவூதி வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டுள்ளது.
அதேவேளை, விமான நிலையத் தாக்குதல்களை நியாயப்படுத்தியுள்ள ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர், சவூதி விமான நிலையங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு, யேமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவூதி அரேபியா உள்நாட்டுப் போரில் தலையிட்டதிலிருந்து சவூதி மற்றும் ஹவுதிகளுக்கு இடையிலான இந்த மோதல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




