ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: இந்தியா திட்டவட்டம்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா உடனடியாக நிறுத்த முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து திகழ்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுக்கும் பொருட்டு, ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் தொடர்பான ‘லிண்ட்சே ஓ. கிரஹாம்’ (Lindsey O. Graham) சட்டத்தை அமெரிக்க அரசு அமுல்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா உடனடியாக நிறுத்த முடியாது. அவ்வாறு திடீரென நிறுத்தினால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பெருமளவில் உயரும் அபாயம் உள்ளது.
ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டு, வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்கத் தீர்மானிக்கலாம்.
ஆனால், சந்தையிலிருந்து இந்தியா விலகிய உடனேயே, ஏற்கனவே சந்தையில் குறைவாக உள்ள விநியோகத்திற்கான தேவையும் விலையும் மேலும் அதிகரிக்கும்.
இது சந்தேகத்திற்கு இடமின்றி நமக்கு ஒரு கடுமையான சவாலாக உருவெடுக்கும்.
எனவே, நமது தேசிய நலன்களுக்கே நாம் முதன்மை முன்னுரிமை அளிக்க வேண்டும் என நம்புகிறேன்.
நமது நாட்டின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கொள்முதல் செய்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.




