அதிக வெப்பம் – இங்கிலாந்தில் முன்கூட்டியே மூடப்படும் பாடசாலைகள்
அதிக வெப்பம் காரணமாக, இங்கிலாந்து முழுவதும் உள்ள பல பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் முன்கூட்டியே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பிற்கு அமைய வார்மின்ஸ்டரில் (Warminster ) உள்ள கிங்டவுன் (Kingdown ) பாடசாலை, மதியம் 12:25 மணி முதல் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் என்றும், பாடசாலைகளுக்கு பிந்தைய பராமரிப்பு மையங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சட்டனில் ( Sutton ) உள்ள ஓக்ஸ் பார்க் உயர்நிலைப் பாடசாலை (Oaks Park High School) செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மதியம் 12:20 மணிக்கு மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு லண்டனில் உள்ள பெல்மாண்ட் ( Belmont ) ஜூனியர் பாடசாலை, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மதியம் 1:30 மணிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்வாறு செய்ய முடியாதவர்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சட்டனில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் பென்ஹில்டன் (Benhilton ) தொடக்கப் பாடசாலையும், இந்த வாரம் மதியம் 1:15 மணிக்கே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது.
மேலும் நியூபரியில் (Newbury) உள்ள கிங்டவுன் மற்றும் ஃபாக்லாண்ட் (Falkland) தொடக்கப் பாடசாலைகள் உட்பட பல பாடசாலைகள், மாணவர்கள் தங்கள் உடற்பயிற்சி உடைகளை அணிந்து பாடசாலைக்கு வர அனுமதிக்கின்றன.




