துருக்கியை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – 08 பேர் பலி
துருக்கியில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 08 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஃப்யோன்கராஹிசார் (Afyonkarahisar) மாகாணத்தில் நேற்று இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வெவ்வேறு வாகனங்களில், பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அயாசினி (Ayazini) கிராமத்திற்கு அருகில் மூன்று பேரும், கியிர் (Kiyir) கிராமத்திற்கு அருகில் மூன்று பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், யுகாரிதான்டிர் (Yukaritandir) பகுதியில் இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்த இருவரும் ஆசிரியர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் பின்னர், எஸ்கிஷெஹிர் (Eskişehir) மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள சிசிரிவி காட்சிகளில், கருப்பு நிற ஜாக்கெட், வெள்ளை நிற பேண்ட் மற்றும் கண்ணாடி அணிந்த நபர் ஒருவர், நீண்ட ஆயுதம் ஒன்றை ஏந்தியபடி சிவப்பு நிற மினிவேன் வாகனத்திற்கு அருகில் நிற்பது பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




