CJP தலைவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி: இந்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவர்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து நிதியுதவி பெற்றுள்ளதாகவும், இதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து சிஜேபி சார்பில் டெல்லியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் டெல்லியில் சிஜேபி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது.
இது தொடர்பாக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மூவரும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஓராண்டு காலத்துக்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என மூவரும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்,
இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சிஜேபி தலைவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளன. இதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த அமைப்புகளிடமிருந்து சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே நிதியுதவி பெற்றுள்ளார். அதேபோன்று, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா பாகிஸ்தான் அரசியல் தலைவர்களிடமிருந்து பணம் பெற்றுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளதாக டெல்லி குற்றப்பிரிவு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




