அனோஜனின் விடுதலைக்காக அனைத்தையும் செய்வோம்: அரசு உறுதி
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்
இவ்வாறு கூறினார்.
“அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறுகோரி சவூதி மன்னருக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
இதற்காக சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் மாலைதீவு சென்றுள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பங்களையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்றையும் சவூதி மன்னருக்குச் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் , சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.
இவ்வாறு ராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்துக் நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.”- என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.




