சீனாவின் நகர்வுகளால் ஆசியாவில் பதற்றம்: எச்சரிக்கும் G7 நாடுகள்
தாய்வானுக்கு கிழக்கே உள்ள கடற்பரப்பில் சீனா தீவிரப்படுத்தி வரும் நடவடிக்கைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை, கடல் போக்குவரத்துச் சுதந்திரம் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து புதன்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாய்வானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, கடந்த ஜூன் மாதம் முதல் தாய்வானின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடலோரக் காவல்படையினரின் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், இராணுவம், துணை இராணுவப் படைகள் மற்றும் பொதுமக்கள் சார்ந்த வளங்களைப் பயன்படுத்தி தாய்வானை கடல்வழியாக முற்றுகையிடுவதற்கான முன்னேற்பாடுகளில் சீனா ஈடுபட்டிருக்கலாம் என தாய்வான் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாய்வான் நீரிணை முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள ஜி7 நாடுகள், பலவந்தம், அச்சுறுத்தல் அல்லது நிர்ப்பந்தம் மூலம் தற்போதைய நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், சீனாவின் கடலோரக் காவல்படையினர் கடந்த மாதம் தாய்வானின் கிழக்குக் கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பணிகள், கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாகவும், இல்லாத அதிகார வரம்பை நிலைநாட்ட சீனா முயற்சிப்பதாகவும் தாய்வான் குற்றஞ்சாட்டியுள்ளது.
முற்றுகை அல்லது மோதல் ஏற்படும் பட்சத்தில், நட்பு நாடுகளிடமிருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான முக்கிய கடல்வழிப் பாதையாக தாய்வானின் கிழக்குக் கடற்பகுதி விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் விமானந்தாங்கிக் கப்பல் உள்ளிட்ட கடற்படைப் பிரிவுகளைப் பயன்படுத்தி சீனா இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ தெரிவித்துள்ளார்.
G7 நாடுகளின் கூட்டறிக்கையை தாய்வான் வரவேற்றுள்ளதுடன், தனது தற்காப்புத் திறன்களை வலுப்படுத்தவும் சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சகம் உடனடியாக எந்தப் பதிலையும் வழங்கவில்லை. தாய்வானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதை சீனா ஒருபோதும் கைவிடவில்லை என்றாலும், அமைதியான முறையில் மீண்டும் இணைவதையே விரும்புவதாகத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





