அமெரிக்க அரசியலில் வரலாற்றுத் திருப்பம்! மிசிசிப்பியில் முதல் கறுப்பின செனட்டர்
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநில செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஸ்கொட் கொலம் (Scott Colom), குடியரசுக் கட்சியின் தற்போதைய செனட்டர் சிண்டி ஹைட்-ஸ்மித்தை (Cindy Hyde-Smith) தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார்.
இதன் மூலம், அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின்னரான மறுசீரமைப்புக் காலத்திற்குப் பிறகு, மிசிசிப்பி மாநிலத்திலிருந்து செனட்டராகத் தெரிவான முதல் கறுப்பினத்தவர் என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்கொட் கொலம் படைத்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் அதிகமுள்ள மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி பெற்றுள்ள இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் எதிர்கொண்ட தோல்விகளையும் இது மேலும் அதிகரித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் மிகவும் நெருக்கமாகக் காணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது சில சந்தர்ப்பங்களில் சில டசின் வாக்குகள் வித்தியாசத்திலேயே கொலம் முன்னிலை பெற்றிருந்தார். எனினும், இறுதியில் 4,500க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக ஊடகங்கள் கணித்துள்ளன.
43 வயதான மாவட்ட சட்டமா அதிபரான கொலம், 1982ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிசிசிப்பி மாநிலத்திலிருந்து செனட்டுக்குத் தெரிவான முதல் ஜனநாயகக் கட்சி உறுப்பினராகவும் உள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான மக்களின் அதிருப்தியைத் தனது தேர்தல் பிரசாரத்தில் முக்கியமாகப் பயன்படுத்திய அவர், மாட்டிறைச்சி விலை உயர்வுக்குப் பதிலாக ஏனைய புரத உணவுகளைத் தெரிவுசெய்யலாம் என சிண்டி ஹைட்-ஸ்மித் தெரிவித்த கருத்தையும் விமர்சனத்துக்குட்படுத்தினார்.
67 வயதான ஹைட்-ஸ்மித், 2018ஆம் ஆண்டு செனட்டராக நியமிக்கப்பட்டதுடன், அதே ஆண்டில் நடைபெற்ற விசேட தேர்தலிலும் வெற்றிபெற்றிருந்தார். ட்ரம்ப் 2024ஆம் ஆண்டு தேர்தலில் சுமார் 23 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மாநிலமாக மிசிசிப்பி காணப்பட்ட போதிலும், இம்முறை செனட் தேர்தலில் ஹைட்-ஸ்மித் தோல்வியடைந்துள்ளார்.
தோல்வியை ஏற்றுக்கொண்ட ஹைட்-ஸ்மித், மிசிசிப்பி மக்களின் தீர்ப்பை மதிப்பதாகவும், ஸ்கொட் கொலமுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொளியில் குறிப்பிட்டுள்ளார்
.
காங்கிரஸில் ஜனநாயகக் கட்சியின் பலம் அதிகரிப்பு
அண்மைய இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் தமது கட்டுப்பாட்டை இழந்துள்ளனர். இதனால், ட்ரம்பின் இரண்டு ஜனாதிபதி பதவிக் காலங்களிலும் முதன்முறையாக ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலான காங்கிரஸை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மிசிசிப்பி வெற்றியின் மூலம் 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில் ஜனநாயகக் கட்சியின் பலம் 55 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா மாநிலத்தின் ஒரு செனட் தேர்தல் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேவேளை, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி இதுவரை 41 ஆசனங்களை மேலதிகமாகப் பெற்றுள்ளதுடன், 254 ஆசனங்களுடன் முன்னிலை வகிக்கிறது. மேலும் 13 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளன.
குடியரசுக் கட்சியின் நீண்டகால ஆதிக்கம் நிலவிய டெக்சாஸ் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில், 2028ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடும் எனக் கருதப்படும் கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர், கொலமின் வெற்றியை வரலாற்றுச் சாதனை எனப் பாராட்டியுள்ளார்.
ஈரான் மீதான போர் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரித்தமை உள்ளிட்ட ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் தொடர்பாக மிசிசிப்பி மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அக்டோபர் மாதம் ரொய்ட்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் கொலம் தெரிவித்திருந்தார்.
மிசிசிப்பி மாநிலத்திலிருந்து இதற்கு முன்னர் செனட்டராகத் தெரிவான கடைசி கறுப்பினத்தவர், முன்னாள் அடிமையான பிளாஞ்ச் புரூஸ் ஆவார். அவர் 1874ஆம் ஆண்டு செனட்டராகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




