‘எண்ணெய் விநியோகம்’ – சிரியாவை குறிவைக்கும் பிரான்ஸ்
வளைகுடா நாடுகளின் எண்ணெய் விநியோகத்திற்காக, ஹார்முஸ் நீரிணைக்கு மாற்றான ஒரு வழித்தடமாக சிரியாவை பிரான்ஸ் பரிசீலித்து வருகிறது.
பிரான்ஸ் ஊடகமான ‘TF1’ இற்கு அளித்த நேர்காணலில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோல் பரோட் (Jean-Noel Barrot) இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தைகளுக்கு நம்பகமான விநியோகத்தை உறுதி செய்ய பலதரப்பட்ட எரிசக்தி வழித்தடங்கள் (energy corridors) அவசியமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
“இந்த நெருக்கடி தொடங்கியதில் இருந்து நாம் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளிலும், ஆங்காங்கே ஏற்படும் தடைகளை (blockages) மட்டும் நாம் சார்ந்து இருக்காதவாறு மாற்று வழித்தடங்களைத் தயார் செய்யும் யோசனையும் ஒன்றாகும்” என்றார்.
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் சில நாட்களுக்கு முன்பு சிரியாவிற்குச் சென்றிருந்ததோடு, அங்கு அவர் ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா (Ahmad al-Sharaa) தலைமையிலான அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





