CJPக்கு வெளிநாட்டு நிதி உதவியா? அமெரிக்க பாடகியின் குற்றச்சாட்டால் பரபரப்பு
அபிஜித் தீப்கே என்பவரால் தொடங்கப்பட்ட ‘கரப்பான் ஜனதா கட்சி’ (CJP) க்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதாக அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் (Mary Millben) எழுப்பிய குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பத்தை விளைவிக்கவும் அமெரிக்க நன்கொடையாளர்கள் சிலர் அபிஜித் தீப்கேவுக்கு நிதி உதவி அளித்து வருவதாக மேரி மில்பென் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள அபிஜித் தீப்கே, “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாட்டினருக்கு யார் உரிமை கொடுத்தது? எங்கள் சொந்தப் பிரச்னைகளைக் கையாள எங்களுக்கு முழுத் திறன் உள்ளது” என பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான மேரி மில்பென், CJP போராட்டங்கள் தோல்வியடையும்போது அமெரிக்க நன்கொடையாளர்கள் அவரைக் கைவிட்டுவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெளிநாட்டு ஆதரவோடு நாட்டைச் சீர்குலைக்க CJP முயல்வதாக பாஜக தரப்பு குற்றம் சாட்டியுள்ள நிலையில், மத்தியில் வலுவான அரசாங்கம் மற்றும் உள்துறை அமைச்சகம் இருக்கும்போது சட்டவிரோதமாக எவ்வாறு வெளிநாட்டுப் பணம் வர முடியும் என அபிஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.
இளைஞர்களின் போராட்டங்களை ஒடுக்க அரசு இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.




