ஓமன் விமானியின் பின்புலம் பற்றி நியூசிலாந்தும் விசாரணை வேட்டை
துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ‘பிளைதுபாய்’ (flydubai) விமானத்தைக் கவிழ்க்கும் முயற்சியில், விமானத்தின் தலைமை விமானியை கத்தியால் குத்திய துணை விமானி (co-pilot), ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது விமானப் பயிற்சியின் ஒரு பகுதியை நிறைவு செய்வதற்காக நியூசிலாந்திற்கு வந்திருந்ததாக நியூசிலாந்து காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
துணை விமானி 2018 நவம்பர் மற்றும் 2019 மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆறு மாத மாணவர் விசாவில் நியூசிலாந்தில் தங்கியிருந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
குடிவரவுத் துறை பதிவுகளின்படி, அவர் 2018 நவம்பர் 30 அன்று நியூசிலாந்திற்கு வருகை தந்து, 2019 மே 23 அன்று புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரித்தானியாவைச் சார்ந்த நிறுவனம் ஒன்றின் சார்பாக விமானப் பயிற்சியின் ஒரு பகுதியை முடிப்பற்காகவே அவர் நியூசிலாந்து வந்திருந்தார். அந்த நிறுவனம் தற்போது நியூசிலாந்தில் இயங்கவில்லை” என நியூசிலாந்து உதவி ஆணையர் மைக்கேல் ஜான்சன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் நியூசிலாந்தில் தங்கியிருந்த காலம் குறித்த பதிவுகளை நியூசிலாந்து காவல்துறையினர் தற்போது மீளாய்வு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்த FZ1073 என்ற பிளைதுபாய் விமானத்தின் துணை விமானி, அவசரகாலக் கோடரியைப் பயன்படுத்தித் தலைமைப் பைலட் மீது தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவத்தை “பயங்கரவாதத் தாக்குதல்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்த ‘ஹமாம் அல்-ஹம்மாமி’ (Hamam al-Hammami) என இரண்டு நம்பகமான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய அதிகாரிகளும் அவர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திய போதிலும், அவரது பெயரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தவில்லை. அத்துடன் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளோ அல்லது பிளைதுபாய் நிறுவனமோ இணைப் பைலட்டின் அடையாளத்தை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
இதனிடையே, குறித்த நபருக்கு ஆஸ்திரேலியாவுடன் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்தும் ஆஸ்திரேலியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




