கனடாவுக்கு ‘இணை உறுப்பினர்’ தகுதியை வழங்க EU முடிவு
ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கைகளில் குறிப்பிடப்படாத இணை உறுப்பினர் (associate member) தகுதியை கனடாவிற்கு வழங்குவதற்கான கதவை ஐரோப்பிய ஒன்றியம் திறந்து வைப்பதாக அதன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார்.
வான் டெர் லேயனின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
வரலாற்று ரீதியாக இவ்வாறான நெகிழ்வுத்தன்மை கொண்ட வகைகளை எதிர்த்து வந்த ஐரோப்பிய ஒன்றியம், மே மாதத்தில் உக்ரைனுக்கு முழுமையான உறுப்பினர் அங்கீகாரத்தை வழங்குவதற்கான ஒரு முதற்படியாக இணை உறுப்பினர் தகுதியை வழங்க ஜெர்மனி முன்வைத்த முன்மொழிவைக்கூட ஏற்றுக்கொண்டது.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் (Strasbourg) உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய வான் டெர் லேயன்,
“கூட்டாண்மைகள் ஐரோப்பாவிற்கு ஒரு மூலோபாயத் தேர்வாகும். ஆனால், அவை சர்வதேச விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கும் பதிலளிப்பதாக அமைந்துள்ளன,” என்றார்.
“செயற்கை நுண்ணறிவு (AI) முதல் காலநிலை மாற்றம் வரை, ஆர்டிக் பகுதி முதல் புவிசார் அரசியல் வரை உலகை நாம் ஒரே கோணத்தில் பார்க்கிறோம்.
மேலும் உக்ரைன் விவகாரம், பாதுகாப்பு, மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றில் நாம் ஒன்றாக நின்றுள்ளோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பாவும் கனடாவும் ஜனநாயகத்தை நம்புகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.




