தாமதமாகும் மழைக்காலம் – காட்டுத்தீ பரவல் குறித்து இந்தோனேசிய அரசாங்கம் எச்சரிக்கை
இந்தோனேசியாவில் காட்டுத்தீ நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலத்தைச் சுத்தம் செய்யத் தீயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
‘சூப்பர் எல் நினோ’ (super El Nino) வானிலை நிலவரத்தால் நாட்டின் காடுகளும் விளைநிலங்களும் வறண்டு போயுள்ள நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான காட்டுத்தீயை இந்தோனேசியா எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாக போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளில் பல வாரங்களாகத் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
எல் நினோ (El Nino) தொடர்பான வறண்ட வானிலை இந்த மாதத்தில் உச்சத்தை எட்டும் என்றும், இது பருவகாலத் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சிக்கலாக்கும் என்றும் வனத்துறை அமைச்சர் ராஜா ஜூலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மழைக்காலம் தொடங்கும் காலத்திற்கான முன்னறிவிப்பை நாட்டின் வானிலை ஆய்வு மையம் மாற்றியமைத்துள்ளதாகவும், அதன்படி மழைக்காலம் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




